மெக்ஸிகோவின் சில பாகங்களுக்கு செல்வது குறித்து கனடா அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.கனடாவைச் சேர்ந்த ஒருவர் மெக்ஸிகோவில் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடாவின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தூதரக ரீதியாக சேவைகளை வழங்கியுள்ளதாக அதன் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிகோ, பிலாயா டெல் கார்மென் பகுதியில் உள்ள விடுதியொன்றில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவமொன்றில் 7 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து அங்கு தங்கியிருக்கும் வௌிநாட்டவர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கனடாவைச் சேர்ந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள சர்வதேச விவகார பிரிவு, அவரின் உயிரிழப்புக்கான காரணம் மற்றும் கனடாவின் எந்தப் பகுதியை சேர்ந்தவர் என்பது தொடர்பான தகவல்களை வௌியிடவில்லை. பாதுகாப்பு காரணங்கள் நிமித்தம் இந்த தகவல்கள் வௌியிடப்படவில்லை என்று அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.





