
சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வர்த்தக மையத்தில் ஜனவரி 23-24ஆம் திகதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாநாட்டை துவக்கி வைத்தார். இதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், காரைக்குடியைச் சேர்ந்த ஒருநிறுவனம், மரத்தில் செய்யப்பட்ட மூக்கு கண்ணாடி, கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தது. இவை பார்வையாளர்களைக் வெகுவாக கவர்ந்தன.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜெய்சங்கர் கூறியதாவது; “மரத்திலான சட்டத்தில் கண்ணாடியை கச்சிதமாகப் பொருத்தி, கலையம்சத்துடன் மூக்குக்கண்ணாடிகள் தயாரித்து வருகிறோம். தேக்கு உள்ளிட்ட ஐந்துவகை மரங்களிலிருந்து, 10 வகையிலான கண்ணாடிகளை தயாரிக்கிறோம்.
இந்தக் கண்ணாடியின் விலை 3,500 ரூபாயில் தொடங்குகிறது; ஓராண்டு உத்தரவாதம் உண்டு. இதேபோன்று, மரத்தில் செய்யப்பட்ட கடிகாரங்களையும், பல வடிவங்களில் தயாரிக்கிறோம். இவற்றின் அடிப்படை விலை 2,000 ரூபாயில் தொடங்குகிறது” என்று அவர் தெரிவித்தார்.
