
வங்கி, மொபைல் எண்ணுக்கு ஆதார் கட்டாயமில்லை என்ற ஆதார் சட்டத்திருத்தத்துக்கு கேபினெட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கேபினெட் அமைச்சரவை திங்கட்கிழமை அன்று கூடியது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக தொலைத்தொடர்பு சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஆதார் சட்டம் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மக்களின் பயோ-மெட்ரிக் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் திரட்டப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கை சட்ட விரோதம் என்றும் தனிமனித அடிப்படை உரிமையை மீறும் செயல் என்றும் 31 பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதன் மீதான தீர்ப்பில், ஆதார் தகவல்களை செல்போன் நிறுவனங்களுடன் இணைப்பது கட்டாயமல்ல. இ-காமர்ஸ், ஆன்லைன் வர்த்தகம், தனியார் வங்கிகளில் கணக்கு தொடங்குதல் மற்றும் வங்கிச் சேவை போன்றவற்றுக்கு ஆதார் தகவல்களை தர வேண்டிய அவசியம் இல்லை.
மத்திய அரசின் ஆதார் சட்டம் செல்லும். இதன்மூலம் சேகரிக்கப்படும் தகவல்களை மானியங்கள் வழங்குவதற்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வருமான வரிக்கணக்கு எண் (பான்) அட்டையுடன் ஆதார் தகவல்களை இணைப்பது கட்டாயம். வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கு ஆதார் அவசியமாகும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து தற்போது மத்திய அமைச்சரவை தொலைத்தொடர்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. சட்டத்திருத்தத்தில் ஆதார் தகவல்களை ஹேக் செய்ய முயல்பவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வழிசெய்யப்படும்.
இதன்படி ஆதார் வைத்திருப்பவர், க்யூஆர் கோட் மூலம் இணையம் இல்லாமல் சரிபார்ப்பை மேற்கொள்ளலாம். இதற்கு ஆதார் எண்ணை அளிக்கத் தேவையில்லை.
அதேபோல தன்னுடைய பெற்றோர்கள் மூலம் ஆதார் அட்டையைப் பெற்ற குழந்தைகள், 18 வயதை அடைந்த பிறகு, ஆதார் தகவல் தளத்தில் இருந்து வெளியே வரும் தேர்வும் சேர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுமக்கள் மொபைல் எண், வங்கிக் கணக்கைப் பெற விருப்பமிருந்தால் ஆதாரை அளிக்கலாம் என்றும் சட்டத்திருத்தம் உருவாக உள்ளது.
