
இது குறித்து இன்று காலை ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் சச்சின் பைலட் கூறுகையில், ''ராஜஸ்தானில் அதிக தொகுதிகள் பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். ம.பி. மற்றும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலை உள்ளது.
பாஜகவிற்கு எதிரான இந்த வெற்றிக்கு, காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் இணைந்து பாடுபட்டனர். இதன் பலனாக காங்கிரஸுக்கு மாபெரும் வெற்றி கிடைக்க உள்ளது. இம்மாநிலங்களின் முதல்வராவது யார் என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்.
கடந்த வருடம் இதே நாளில் காங்கிரஸின் புதிய தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்றிருந்தார். அவரது உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் முதலாண்டிலேயே மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது'' என்று தெரிவித்தார்.
இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தனது முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை. ராஜஸ்தானில் அதன் முன்னாள் முதல்வர் அசோக் கெல்லோட்டும், முன்னாள் மத்திய அமைச்சருமான சச்சின் பைலட் ஆகியோருக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
ராஜஸ்தானின் 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் 96, பாஜக 78 மற்றும் பகுஜன் சமாஜ் 4 இடங்களில் முன்னணி வகிக்கின்றன. இதன் இறுதி முடிவுகள் இன்னும் ஓரிரு மணி நேரங்களில் வெளியாகிவிடும்.
