விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 8 மாத கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதித்தவரின் ரத்தம் ஏற்றிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ‘சீமாங்’ மருத்துவப் பிரிவில் 9 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர். அது போல், தற்கொலைக்கு முயன்ற ரத்தக் கொடையாளரான இளைஞ ரும் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மாநில திட்ட இயக்குநர் டாக்டர் செந்தில் ராஜ், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் ரத்தக் கொடையாளரை நேற்று சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
எச்ஐவி ரத்தம் ஏற்றிய கர்ப்பிணிக்கு சிறந்த சிகிச்சையை வழங்கி வருகிறோம். கர்ப்பிணிக்கு எந்தளவுக்கு எச்ஐவி தொற்று பரவி யுள்ளது என்பதைப் பரிசோதனை செய்து ஏஆர்டி சிகிச்சையைத் தொடங்கி உள்ளோம். அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளை யும் வழங்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
கர்ப்பிணிக்கு உயர் சிகிச்சை வழங்குவதும், அவருக்கு பிறக்கப் போகும் குழந்தையை எச்ஐவி தொற்று இல்லாமல் பாதுகாப்பதும் எங்களுடைய முதல் நோக்கம். அதற்காக, மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர். இனி, இதுபோன்ற தவறுகள் நடக்காது. ரத்தம் தந்தவ ரும், அவரது குடும்பத்தினரும் மனதளவில் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றார்.
தகுதியான ஊழியர்களே
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்: எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் தில் பணிபுரிபவர்களை ஒப்பந்த பணியாளர்கள், நிரந்தரப் பணியா ளர்கள் என்று பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. ஊழியர்களுடைய ஒப்பந்தம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படுகிறது. எச்ஐவி பாதிப்பை பெருமளவு குறைத்து உள்ளோம். ஏஆர்டி மருந்துகள் எடுத்துக் கொள்வதால் நோயாளி கள் கூடுதலாக 30 முதல் 40 ஆண்டு கள் வரை ஆரோக்கியமாக வாழ்கின் றனர்.
முறையாக பதிவு செய்த கல்லூரி களில் படித்தவர்களே ரத்த வங்கி களில் ஆய்வக நுட்புனர்களாக பணி நியமனம் செய்யப்படுகின்றனர். அவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர் களே.
வதந்திகளை நம்ப வேண்டாம்
அரசு மருத்துவமனைகளில் மேற் கொள்ளப்படும் ரத்த தானத்தில் எச்ஐவி தொற்று பரவுவதாக குற்றம் சாட்டப்படுவது முழுக்க முழுக்க பொய்யான தகவல். வாட்ஸ்அப் வதந்திகளை நம்பி ஏமாற வேண் டாம்.
அரசு மருத்துவமனைகளில் ஓர் ஆண்டுக்கு 8 லட்சம் ரத்த தானம் நடக்கிறது. அவை அனைத்தும் பாதுகாப்பாகவே பகிரப்படுகிறது.
ரத்தப் பரிசோதனைக்கான அனைத்து உபகரணங்களும் பாதுகாப்பானதே. அனைத்து அறுவை சிகிச்சைகளும் அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகளை நம்பியே உள்ளன. பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டக்கூடாது.
அதற்காக தற்போது நடந்த தவறை நியாயப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. மன்னிக்க முடியாத குற்றம். விசாரணையை அடிப்படையாகக் கொண்டு, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு டாக்டர் செந்தில்ராஜ் கூறினார்.‘அதையும் சேர்த்து விசாரிக்கிறோம்’
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மாநில திட்ட இயக்குநர் டாக்டர் செந்தில்ராஜிடம், "இந்த விவகாரத்தில் அரசு நிர்வாகமே நேரடியாக வந்து தவறை ஒப்புக் கொள்ளவில்லையே. ரத்தம் தந்த சம்பந்தப்பட்ட இளைஞர் வெளியே வந்து சொன்னதால்தானே தவறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு என்ன நம்பிக்கை கொடுக்கப் போகிறீர்கள்" என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, "ரத்த தானம் செய்பவர்களைப் பரி சோதனை செய்து அவர்களுக்கு எச்ஐவி, மலேரியா உள்ளிட்ட மற்ற நோய்கள் இருந்தால் அவர்களுடைய ரத்தத்தை அழித்து விடுவோம். அவர்களுடைய முகவரி, செல்போன் எண்களை நாங்கள் வைத்துக் கொள்வதால், அவர்களை அடையாளம் கண்டு கவுன்சலிங் கொடுத்து அவர்களுக்கான சிகிச்சையை கொடுக்கிறோம். அதனால், ஒரே ஒரு சம்பவத்தை வைத்து குற்றம்சாட்டுவது சரியானது இல்லை" என்றார்.
மேலும், "சம்பந்தப்பட்ட இளைஞர் 2016-ம் ஆண்டி லேயே ரத்த தானம் செய்தபோது அவருக்கு எச்ஐவி தொற்று இருந்ததாக சொல்லப்படுகிறதே, இதுவும் ஒரு வகையில் அலட்சியம்தானே" என கேட்டபோது, "அதையும் சேர்த்து விசாரிக்கிறோம்" என்றார்.
