உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மெரினா கடற்கரையில் முறைப்படுத்தப்பட்ட கடைகள் மற்றும் தூய்மைப் பணிகளை ஆணையர் தா.கார்த்திகேயன் நேற்று காலை ஆய்வு செய்தார்.
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கடற்கரைப் பகுதியை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையர் ஆகியோர் காலையில் சென்று பார்வையிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று மாநகராட்சி ஆணையர் பணிகளை பார்வையிட்டார்.
இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி, கடற்கரையை தூய்மையாக பராமரிக்க அங்குள்ள சிறு கடைகள் முறைப் படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சி துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியா ளர்கள் அங்கு சேகரமாகும் குப்பை களை உடனுக்குடன் அகற்றி வரு கின்றனர்.
இந்நிலையில், செவ்வாய்கிழமை காலை மெரினா கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
முறைப்படுத்தப்பட்ட கடைகள் துப்புரவு பணிகள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர், “மெரினா கடற்கரை பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடம்.
எனவே, இந்தக் கடற்கரையை தூய்மையாக வைத்து கொள்ள தேவை யான அனைத்து நடவடிக்கைகளையும் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப் பின் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
லூப் சாலை பயன்பாடு
மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் போக்குவரத்து இடையூறின்றிப் பயன் படுத்த ரூ.47 கோடியில் மேம் படுத்த பூர்வாங்கப் பணிகள் தொடங்கி யுள்ளன. இதை ஆய்வு செய்த ஆணை யர், கட்டிடக்கழிவுகளை உடனடியாக அகற்ற பணியாளர்களுக்கு உத்தர விட்டார்.
மேலும், லூப் சாலையில் உள்ள மீன் கடைகளால் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், ரூ.5 கோடியில் இரண்டு ஏக்கர் பரப்பில் நவீன வசதிகளுடன் கூடிய 300 புதிய மீன் கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளையும் ஆணையர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது துணை ஆணையர்கள் எம்.கோவிந்தராவ், பி.மதுசூதன் ரெட்டி, சுபோத்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
