
இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்ட காமிக்ஸ்கள் தமிழ் வரலாற்றில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மிகக் குறைவே. அந்த வேளைகளில் “லயன் காமிக்ஸ்”, “இந்திரஜால் காமிக்ஸ்” என்ற புத்தகங்கள் யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகக் கடையில் கிடைத்த போதும், ராணி காமிக்ஸ் ஐ விஞ்சும் அளவுக்கு ஏனோ அவை பிரபல்யம் அடைந்திருக்கவில்லை.
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டியது போல “அம்புலி மாமா” புத்தகத்தோடு மட்டும் காலத்தை கடத்திக் கொண்டிருந்த எமக்குக் கிடைத்த அடுத்த கட்ட வளர்ச்சிதான் “ராணி காமிக்ஸ்“.
“பையன் வயசுக்கு வந்திட்டான்” என்றால், ராணி காமிக்ஸ் ஐ கையில் எடுத்துவிட்டான் என்பது பொருள்.
கிடைத்த புத்தகத்தை வாசிப்பது மட்டுமல்ல.... அடுத்த வெளியீடு என்ன என்பதை அந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் பார்த்து, அந்தப் புத்தகத்துக்காக காத்திருப்பது, காதலியை எதிர்பார்த்துக் காத்திருப்பதை விட சுகமான அனுபவம்.
ஒன்று விடாமல் எல்லாவற்றையுமே வாசித்த எங்களுக்கு “எரிநட்சத்திரம்“ என்ற புத்தகம் மட்டும் இறுதிவரை கிடைக்காமலேயே போய்விட்டது. அந்த “எரிநட்சத்திரம்“ இலங்கைக்கு ஏனோ வரவே இல்லை. எப்படியாவது இந்தப் புத்தகத்தை எடுத்துத் தரும்படி கேட்டு, நண்பன் கமலக்கண்ணனை எத்தனை தடவை கெஞ்சியிருப்பேன்? ராணி காமிக்சின் கிடைத்தற்கரிய பல புத்தகங்களை எமது அயலவானான நண்பன் உதயகுமார் (உதயன்) வைத்திருந்தான். (உதாரணம்: கொலைகார ராணி, தீயில் எரியும் பெண், உடைந்த விமானம்).
ராணி காமிக்ஸ் புத்தகங்களின் வர்ண அட்டைப் படங்களை ரசிப்பதும், அவற்றின் மீது செய்திருக்கும் லமினேட் ஐ தடவி அதன் வழுவழுப்பான மென்மையை உணர்வதும், புதிய புத்தகத்தைப் பிரித்து அதன் பக்கங்களின் வாசனையை நுகர்வதும் எனக்கு மட்டுமே இருந்த பைத்தியக்கார ஆசைகளா தெரியாது.
7 ஆம் வகுப்பில் படித்த போதுதான் இந்த ராணி காமிக்ஸ் மீது மோகம் ஆரம்பித்தது. ஜேம்ஸ் பாண்ட் இன் கதைகள் என்றாலே “கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான்” என்பது பொதுவான கருத்து. த்ரில் கதைகளாய் இருந்தாலும், கண்டிப்பாய் சில அந்தரங்க அழகிகளும் கதையில் வருவார்கள். அப்படி வரும் அந்த அழகிகளின் படங்கள் அரைகுறை ஆடைகளுடன் தான் இருக்கும். ஜேம்ஸ் பாண்ட் புத்தகத்தை வீட்டில் வைத்திருப்பதும், கடிநாய்களோடு பக்கத்தில் குந்தி இருந்து கறி எலும்பு சூப்புவதும் ஒன்றுதான்.
(கடித்துக் குதறப்பட்டு விடுவோம்). நீல நிற பேனாவினால் அந்த அழகிகளுக்கு பாவாடை, சட்டை கீறிக் கலர் அடித்த பிறகு இந்தப் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றதற்கு இதுதான் ஒரே காரணம். அப்படியான கிளுகிளுப்பையும் சங்கடங்களையும் ஏற்படுத்திய மிக முக்கிய புத்தகம் என்றால் அது ஜேம்ஸ் பாண்ட் இன் “அழகியைத் தேடி“ என்ற புத்தகம் ஒன்றுதான். சிறுவர்களுக்கான புத்தகங்களாக இருந்த போதும், இவ்வளவு ஆபாசமாக படங்கள் போட்டிருக்கத் தேவையில்லையோ என்று இன்று நினைப்பது, கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரத்துக்கு ஒப்பானது.
(கடித்துக் குதறப்பட்டு விடுவோம்). நீல நிற பேனாவினால் அந்த அழகிகளுக்கு பாவாடை, சட்டை கீறிக் கலர் அடித்த பிறகு இந்தப் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றதற்கு இதுதான் ஒரே காரணம். அப்படியான கிளுகிளுப்பையும் சங்கடங்களையும் ஏற்படுத்திய மிக முக்கிய புத்தகம் என்றால் அது ஜேம்ஸ் பாண்ட் இன் “அழகியைத் தேடி“ என்ற புத்தகம் ஒன்றுதான். சிறுவர்களுக்கான புத்தகங்களாக இருந்த போதும், இவ்வளவு ஆபாசமாக படங்கள் போட்டிருக்கத் தேவையில்லையோ என்று இன்று நினைப்பது, கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரத்துக்கு ஒப்பானது.
நல்லவேளை... ‘ரோஜா’ படத்தில் நிறைய சீன்களை வெட்டி நீக்கிய விடுதலைப் புலிகளின் தணிக்கைக் குழுவின் கண்களுக்குள் அகப்படாமல், ஜேம்ஸ் பாண்ட் மட்டும் டிமிக்கி கொடுத்துத் தப்பிவிட்டார்.
பள்ளிக்கூடத்தில் வைத்து, ஆசிரியர்களுக்குத் தெரியாமல் இந்தப் புத்தகங்களை கைமாற்றிக் கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல. ஏதோ உள்நாட்டு ரகசியங்கள் அடங்கிய கோவையொன்று வெளிநாட்டு உளவாளிக்கு கைமாறுவது போல அத்தனை கச்சிதமாக இக் கைமாற்றம் நடக்கும். அதுவும் இந்துக்கல்லூரி விஞ்ஞான ஆசிரியர் ஸ்ரீவேல்நாதனிடம் சிக்கினால் சின்னாபின்னம் ஆகிவிடுவோம் என்பது தெரிந்தும், இந்தக் கரும்புலி வேஷம் போடுவது வியப்புத்தான். கணபதிப்பிள்ளை மாஸ்டரின் சித்திரபாட வகுப்பில் ஒளித்து வைத்து வாசித்த ராணி காமிக்ஸுடன் வெளியில் அனுப்பப்பட்டு முழங்காலில் நிற்க வைக்கப்பட்ட என் அனுபவமும் பயங்கரம்தான். அந்தளவுக்கு காமிக்ஸ் போதைக்கு அடிமை நான்.
காமிக்ஸ்களை ஒழித்து வைக்க, தமிழ் புத்தகமோ சமயபாடப் புத்தகமோ சரிவராது. சமூகக்கல்வி வரலாற்றுப் புத்தகம் தான் சும்மா அளவெடுத்து செய்த புத்தகம். அதற்குள் காமிக்ஸ் ஐ செருகி வைத்தால் மந்திரவாதியாலும் கண்டுபிடிக்கவே முடியாது. காமிக்ஸ் ஐ குழாய் போல சுருட்டி காற்சட்டை பொக்கற்றுக்குள்ளும் வைக்கலாம். ஆனால், உட்காரும் போது பிதுங்கி வெளியே தெரிவதால் பின் வரிசை மாணவர்களுக்குத் தெரிந்துவிடும். அவர்கள் யாராவது ஆசிரியரிடம் போட்டுக் கொடுக்காதபடி, அவர்களுடன் நல்லுறவைப் பேண வேண்டியது மிக முக்கியம். இதனால், பின்வரிசை மாணவர்களை நான் எப்போதும் எனது கூடப் பிறக்காத சகோதரர்கள் போல நடத்துவது வழமை. (Safety First எண்டு சும்மாவா சொன்னாங்கள்😜)
என்னுடைய வகுப்பில் முதன்முதலில் ராணி காமிக்ஸை வாசிக்க ஆரம்பித்தவன் நண்பன் அகிலன். அவனிடம் வாங்கியதுதான் என் முதல் புத்தகம். “ஜனாதிபதி கொலை“ என்பது அதன் பெயர். அந்த மகராசன் எந்த விஷுபுண்ணிய காலத்துக்குள் அந்த முதல் புத்தகத்தை என்னிடம் தந்தானோ, அதைத் தொடர்ந்து நிறையப் புத்தகங்கள் என் கைகளில் சிக்கின.
குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் மட்டும்தான் ராணி காமிக்ஸில் எல்லாப் புத்தகங்களிலும் மாறி மாறி வருவார்கள்.
1. ஜேம்ஸ் பாண்ட் 007
2. லேடி ஜேம்ஸ் பாண்ட் மாடஸ்தி
3. மாயாவி
4. கார்த்
5. பிளாஷ் கார்டன்
6. டயானா
7. மாண்ட்ரிக்
8. டைகர்
9. கிட்கர்சன்
10. தியோ
11. டிஸ்கோ
12. டேவிட்
1. ஜேம்ஸ் பாண்ட் 007
2. லேடி ஜேம்ஸ் பாண்ட் மாடஸ்தி
3. மாயாவி
4. கார்த்
5. பிளாஷ் கார்டன்
6. டயானா
7. மாண்ட்ரிக்
8. டைகர்
9. கிட்கர்சன்
10. தியோ
11. டிஸ்கோ
12. டேவிட்
இப்படி சிலர் தான்.
“அமெரிக்க்காவின் அரிசோனா மாநிலத்தில் ஒரு விடுதியில்...”
என்றே அனேகமான புத்தகங்களில் கதை ஆரம்பிக்கும். ஆனால் அதுதான் இவ்வகைப் புத்தகங்களுக்கு அழகும் கூட.
நானும் நண்பர்களும் சேகரித்து வைத்திருந்த ராணி காமிக்ஸ் களை ஒன்று சேர்த்து “ராணி காமிக்ஸ் நூலகம்” என ஆரம்பித்தோம். அயலில் இருந்த குகன் அண்ணை வீட்டில் விளையாட்டாக ஆரம்பித்த இச்செயற்பாட்டுக்கு பலரின் பங்களிப்பு இருந்தது.
கண்ணன் - திட்டமிடல் மற்றும் புதிய புத்தகக் கொள்வனவு.
குகன் அண்ணை - நூலக கட்டிட உதவி (வீட்டு விறாந்தையை இலவசமாக தந்தவர்). அத்துடன் கணக்கு வழக்கு சரி பார்த்தல்.
சிவநேசன் - புத்தக விநியோகம் மற்றும், நூலகத்துக்கு புதிய உறுப்பினர்களை கெஞ்சி மன்றாடி சேர்த்து விடல்.
ரஞ்சித் (நான்) - ‘நூலக அறிவுறுத்தல் விபரங்கள்’ காகிதங்களில் ஒவ்வொன்றாக எழுதி எடுத்துச் சென்ற, மீளளித்த திகதிப் பதிவுகள் பொறுப்பு.
திருக்குமார் - புத்தகத்தை திருடிக்கொண்டு ஓடுவோரை துரத்திப் பிடித்து அவர்களின் சைக்கிள் திறப்பை பிடுங்கி வருதல்
ஐம்பதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் வலு அமர்க்களமாய் ஆரம்பித்த நூலகத்தில் எடுத்துச் சென்ற புத்தகங்கள் எதுவும் திரும்பி வராமையால் சோகத்துடன் நூலகம் இழுத்து மூடப்பட்டது.
1983இல் நடந்தது போல எங்கள் நூலகம் பற்றி எரியவில்லை....
எங்கள் வயிறுதான் பற்றி எரிந்தது
(சண்டாள பயல்கள் புத்தகங்களை திருப்பி தராததால...)
1983இல் நடந்தது போல எங்கள் நூலகம் பற்றி எரியவில்லை....
எங்கள் வயிறுதான் பற்றி எரிந்தது
(சண்டாள பயல்கள் புத்தகங்களை திருப்பி தராததால...)
மிக அருமையான, அற்புதமான கள்ளங்கபடமில்லா உணர்வுகளைத் தாங்கி நின்றது மாணவப் பருவம் ஒன்றுதான். இக்கட்டுரையை நான் விளையாட்டாக எழுதியபோதும் இதில் நடப்பு விடயமொன்று கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டும்.
இன்றைய நாட்களில் சிறுபிள்ளைகளிடத்தே வாசிப்புப் பழக்கம் மிக அருகி வர, இப்படியான சிறுகதைப் புத்தகங்களின் பாவனை இல்லாமலேயே போய்விட்டது. 2005 முதல் ராணி காமிக்ஸ் தனது வெளியீடுகளை நிறுத்திக் கொண்டதாகவும் அறிந்தேன். யூடியூப் இல் வீடியோக்களாக கார்ட்டூன்களை பார்ப்பதை விட, கதைப் புத்தகங்களாக ஈபுக் மூலம் குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை வலிந்து ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் பொறுப்பாக அமையவேண்டும்.
வாசிப்புப் பழக்கம் மிக மிக அவசியாமானதொன்று. யாழ்ப்பாணம் சென் ஜோன் பொஸ்கோ வித்தியாசாலையில் நான் ஐந்தாம் வகுப்பில் படித்த போது (1987இல்) அதிபர் அறைக்கு எதிர்ப்புறம் இருந்த ஜன்னலில் ஒரு வாக்கியம் பலகையொன்றில் அழகாக எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது.
“வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்”
ரஞ்சித் தவராஜா
