கனடாவின் சென்.மைக்கேல் தனியார் பாடசாலையில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இவற்றை தடுக்க அப்பாடசாலையில் பழைய மாணவர்களின் உதவி அவசியமென பாடசாலை அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
ரொறொன்ரோவில் நேற்று செவ்வாய்க்கிழமை சுமார் 300 பழைய மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய சென்.மைக்கேல் பாடசாலையில் அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பழைய மாணவர்களில் குறிப்பாக மனநல மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் தமது பாடசாலை மாணவர்களுக்கு உதவலாமென அதிபர் குறிப்பிட்டார். அல்லது மனநல நிபுணர்களின் உதவிகளை பெற்றுக்கொடுக்கலாம் என்றும் கூறினார்.
குறித்த பாடசாலை மாணவர் குழுவொன்று கடந்த வாரம் சக மாணவர்களை பாலியல் ரீதியாகவும் வேறு வகையிலும் துன்புறுத்தி, அதனை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
