LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, October 31, 2018

பரசுராமபூமி

(அண்மையில் வெளிவந்த ஈழத்தின் முதல் மறுவாசிப்பு சிறுகதைத் தொகுப்பான வி.மைக்கல்  கொலினின் "பரசுராம பூமியில்" இருந்து...  )

காற்றைக் கிழித்துக் கொண்டு வானில் பரவிய பொஸ்பரஸ் குண்டுத் துகள்கள் யுத்தத்தால் சிதறி, சின்னாபின்னமாக்கப்பட்டுக் கிடந்த பொதுமக்கள் கூடாரங்கள் மேல் விழுந்து சிதறின. உடனே கூடாரங்கள் தீப்பற்றிக் கொண்டன. அதனைத் தொடர்ந்து எங்கிருந்தோ வந்த ஆட்டிலறிக் குண்டுகளும், மல்டிபரல் குண்டுகளும், கட்டிடங்கள் மீதும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட மருத்துவமனைகள் மீதும், மக்கள் தம் உயிர்காக்கப் பதுங்கியிருந்த பதுங்கு குழிகள் மீதும் விழுந்து தொடர்ச்சியான ஒரு வெடிப்பதிர்வை ஏற்படுத்தின.  
நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் சவங்களாய்ச் சரிய, கை, கால்களை இழந்து, காயப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் செந்நீர் மண்ணோடு மண் ணாய்க் கலந்து முள்ளிவாய்க்கால் மண் சிவந்த மண்ணாகிக் கொண்டிருந்தது. 
ஓலங்கள்! 
எங்கும் ஓலங்கள்!! 
நீண்ட துயில் கொண்டிருந்த பரசுராமர் கண் விழித்தார். தொடர்ச்சியான ஓலங்களின் பெரும் சப்தம் அவரது உறக்கத்தைச் சில நாட்களாகவே கலைத்துக் கொண்டிருந்தது. அண்டப் பெருவெளியின் எங்கோ ஒரு மூலையில் இருந்து காற்றின் கரங்களால் துரத்தப்பட்டு அவரது செவிப்பறையில் மோதும் கணவனை இழந்த பெண்களின் ஓலம், பெற்றோரை இழந்த குழந்தைகளின் ஓலம், பிள்ளைகளைப் பறி கொடுத்த பெற்றோரின் ஓலம், சகோதரியை இழந்து. சகோதரனை இழந்து, தவிக்கும் உறவுகளின் ஓலம், கட்டிய மனைவியைப் பிரிந்து கைக்குழந்தைகளுடன் 'இனிமேல் என்ன செய்வது?' எனத் தவிக்கும் கணவன்மார்களின் ஓலம். 
மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல், பெரும் காற்றால் அணையப் போவதாய் அல்லாடும் விளக்கினைப் போல் உயிர் மூச்சைக் கையில் பிடித்தபடி உயிருக்குத் தவிக்கும். இந்த வேளைகளிலும், தம் பிள்ளைகளைப் 'போராட வா' என இழுத்துச் செல்லும் இயக்கத்தினரை நோக்கிய அப்பாவி பெற்றோரின் ஓலம்! ஓலம்!! எங்கும் ஓலம்! ஒப்பாரிகளின் தேசமாக மாறிப்போன மண்ணின் ஓலம். நவீன விஞ்ஞான சாதனைகளின் ஓர் அம்சமான ஹிரோசிமா – நாகசாகி போல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வன்னி மண்ணின் ஓலம்! இதென்ன பரசுராம பார்கவருக்குப் புதிதா? குருஷேத்திரப் போரில் அவர் பார்க்காத இழப்புக்களா என்ன? லட்சக்கணக்கில் மடிந்த போர்வீரர்களின் எண்ணிக்கை தெரியாதவரா என்ன? இருபத்தொரு தலைமுறைச் சத்திரியர்களின் குருதியைக் குடித்த அவரது மழுவிற்கு இந்த இரத்த அபிஷேகம் தூசு அல்லவா? 
ஓலங்கள்.... அவரது காதின் செவிப்பறையைத் தட்டியதை விட பரசுராமரின் மனக்கதவுகள் அதிரத் தொடங்கின. ஓலங்கள் வெறுமனே ஒப்பாரிகளாக இல்லாமல் அதில் ஏதோ ஒரு செய்தி அவருக்குத் தெளிவாகக் கேட்டது. 
'இருபத்திரெண்டாவது தலைமுறை... இருபத்திரெண்டாவது தலைமுறை' என ஏதோ ஒரு மந்திரச் சொல் அவரது மனச்சாட்சியை தொடர்ச்சியாகக் குத்திக் கிளறியது. வாயுதேவன் பரசுராமரை நித்தியமும் சிந்திக்க விடாமல் செவிப்பறையைத் தொடர்ச்சியாகத் தாக்கிக் கொண்டிருந்தான். 
இந்த ஓலங்கள்... யாருடைய ஓலங்கள்...? ஏன் என் செவியில் வந்து விழ வேண்டும்? அதுவும் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு. ஏதோ ஒன்றின் நீட்சியாக அவரைக் குறிவைத்துத் தாக்குவதைப் போன்ற ஓர் உணர்வு அவருக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகளை எழுப்பியது. இருபத்தொரு தலைமுறை போதாதென்று மணக்கோலத்தில் வந்த இராமனிடம் போர் செய்யப் போய் தனது தவவலிமை இழக்கப்பட்டதும் அதன் பிறகு ஏற்பட்ட ஞானஉபதேசம். அந்த நிகழ்விற்குப் பின் எனது 'மழு' எந்த ஒரு சத்திரியனையும் கொல்லவில்லை. ஆனால் சில நாட்களாக எனது செவிகளில் விழும் 'இருபத்திரெண்டாவது தலைமுறை' என்ற அந்த ஒலி எங்கிருந்து வருகின்றது. தலையைப் பிய்த்துக் கொண்ட பரசுராமர் மீண்டும் ஓர் முறை தனது சாபங்களை மீட்டிப் பார்க்க தொடங்கினார். 
தர்மதேவதை அவரைப் பார்த்து நகைப்பது அவருக்குத் தெரிந்தது. அவளது மகனை, ஆம் தர்மத்தின் மகனை சாபம் கொடுத்துக் கொன்ற வராயிற்றே, தன் உறக்கம் கலையாதிருக்க வலி தாங்கிய கர்ணனுக்கு அவனது குலத்தை அறியாமலேயே, தான் கொடுத்த சாபம், யுத்தக் கலைகளைக் கற்பித்துவிட்டு 'யுத்தத்தின் போது கற்ற கலைகள் யாவும் மறந்து போகட்டும்'; என்று சாபம் கொடுப்பது ஓர் குருவின் இலட்சணமா...? அதனை விட அன்று அவனைக் கொன்றிருக்கலாமே...? அல்லது தனது ஞான சிருஷ்டியால் அறிந்து அவனுக்கு கலைகளைப் போதியாமல் விட்டிருக்கலாமே? தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தாரக மந்திரத்துக்குக் கட்டுண்டு பெற்ற தாயைக் கொலை செய்ததும், அதற்காக தந்தை தந்த வரத்தைக் கொண்டே தாயை உயிர்ப்பிக்கக் கேட்டதும். எல்லாமே அவசர புத்தியால் வந்த வினை. முன்யோசனையின்றி தனது வீரத்தையும் தவ வலிமையையும் பெரிதென எண்ணித் தன்னிச்சையாக எடுத்த முடிவுகள். 
மோனநிலையில் இருந்த பரசுராமரின் செவிகளில் மீண்டும் அந்த ஓலங்கள் பெரிதான அலறலாகக் கேட்கத் தொடங்கியது. 'காப்பாற்றுங்கள், எங்களைக் காப்பாற்றுங்கள்....' பெரும் சப்தம் பரசுராமரை மட்டுமல்ல அவரது புரவியையும் அசைக்கத் தொடங்கியது. அவர் தட்டி விடாமலேயே அது அவரையும் சுமந்து கொண்டு அந்த ஓலங்கள் வந்த திசைநோக்கிப் பறக்கத் தொடங்கியது. 
காடுகள், மலைகள், கடல்கள் எனப் புரவி பலகாத தூரம் கடந்து இறுதியாக வன்னிமண்ணின் பெருநிலப்பரப்பில் வந்துநின்றது. 
யுத்தத்தின் சத்தங்கள், வெடிப்போசைகளின் அதிர்வுகள் பரசுராமரைப் பயங்கொள்ள வைத்தன. இது அவர் காணாத யுத்த களம். குருஷேத்திரப் போரை விடக் கொடூரமான யுத்த களம். அந்த யுத்தத்தில் நேர்மை இருந்தது. ஆனால் இங்கு....?
தன்னால் இருபத்தியொரு தலைமுறை சத்திரியர்கள் கருவறுக் கப்பட்டு நரமேதயாகம் செய்து அவர்கள் குருதியைக் கொண்டு உண்டாக்கிய 'சமந்த பஞ்சம்' என்ற இடத்தில் நடைபெற்ற வீம துரியோதன யுத்தத்தில்;, யுத்த விதிமுறைகளுக்குமாறாக துரியோதனனைக் கதையால் வீமன் தொடையில் அடித்துக் கொன்றான் என்பதற்காகப் பாண்டவர்களின் தேரோட்டியாகத் தன் தம்பி கண்ணள் போர் புரிந்தாலும், வீமனுக்கு எதிராகப் பலராமர் போர் புரியத் தயாரான யுத்த களம் அல்லவா குருஷேத்திரம். 
இங்கே யுத்த விதிமுறைகள், யுத்த தத்துவங்கள், அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இது யாருடைய யுத்தம்? எந்த இரண்டு அரசுகள் தமக்குள் மோதுகின்றன என்பதே அவருக்குப் புரியாத புதிராக இருந்தது. ஆனால் இதுவும் ஒரு குருஷேத்திரப் போரின் நீட்சியாகத் தொடர்கின்றது என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது. 
ஒருபக்கம் அவரது பெரும் தேசம் உட்பட, உலக வல்லரசுகளும் ஒன்று சேர்ந்து ஒரு மக்கள் கூட்டத்தின் மீது போர் தொடுப்பதாகப்பட்டது. இவர்கள் யார்....? இவ்வளவு பெரிய படையெடுப்புடன் மோதும் இவர்கள் யார்..? அவரது ஞானக் கண்கள் அகலத்திறந்தன. ஆயுதங்களுடன் ஓடித் திரியும் அந்த இளைஞர்கள் யார்....? திகைத்துப் போனார் இராமபத்திரன் எனும் பரசுராமர். சில வருடங்களுக்கு முன்னால் தனது தேசத்தில் தனது தேசத்தவர்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட இந்த இளைஞர்கள் மீது.... இன்று எனது தேசமே முன்னின்று போர் தொடுப்பதா...? 
யுத்ததந்திரங்கள் சொல்லிக் கொடுத்து, ஆயுதங்கள் அள்ளிக் கொடுத்த எனது தேசமே இவர்கள் மீது போர் தொடுப்பதா? நான் கர்ணனுக்குச் செய்ததை எனது தேசம் இவர்களுக்குச் செய்கிறதா...?
இது எனது பாரத தேசத்தினதும், எனதும் சாபக்கேடா? புண்ணிய தேசம் என்பதும், மகான்களின் தேசம் என்பதும் வெறும் வெற்று வார்த்தைகள்தானா? 
சத்திரியர்களின் இருபத்தியொரு தலைமுறைகளை நான் வேரறுத்தேன். இருபத்திரெண்டாவது சத்திரியர்களின் தலைமுறைகளை எனது தேசம் வேரறுக்கின்றதா...? தன் மீதும் தனது தேசத்தின் மீதான கோபமும் அவரது கண்களைச் சிவக்கச் செய்தது. வெட்கத்தில் தனது தாடி மயிர்க் கால்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து விழுவது போன்ற பிரம்மை அவரை வாட்டி வதைத்தது. பரசுராமர் தனது பரசுவை எடுத்து காறித் துப்பிவிட்டு தூரத்தே எறிந்தார். அது நந்திக் கடல் பெரு வெளியில் சங்கமமாகியது. 
அவரது புரவி அவரையும் சுமந்த கொண்டு வெள்ளைக் கொடி போர்த்திய உடலங்களின் நடுவே பாய்ந்தோடி வன்னிக் காட்டுக்குள் காணாமல் போனது. 

- மைக்கல் கொலின் -




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7